சீனாவிடமிருந்து இலங்கைக்கு ரூபா 61.5 பில்லியன் (2 பில்லியன் RMB) கடனுதவி வழங்குவது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இன்று (17) சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடு, பொருளாதார மறுமலர்ச்சி, நிதி ஸ்திரத்தன்மை, வாழ்வாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பில் இலங்கைக்கு உதவும் வகையில் குறித்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக, தூதரகம் அறிவித்துள்ளது.
——-
கண்டி- மஹியாவிலுள்ள முதியோர் இல்லத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக கண்டி பிராந்திய சுகாதார மருத்துவ பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி பகல் இருவரும் நேற்று முன்தினம் (16) காலை ஒருவருமாக மூன்று மரணங்கள் முதியோர் இல்லத்தில் நிகழ்ந்துள்ளதாக பதிவாகியிருந்தன. அதேவேளை, நேற்று கண்டி தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஆகவே முதியோர் இல்லத்திலிருந்து இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அவரது மரணத்திற்குப்பிறகு, நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 46 பேருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் 06 ஊழியர்களும் அடங்குவதாக கண்டி மாநகர சபையின் சுகாதாரப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
முதியோர் இல்லத்திலுள்ள அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பு முதல் ேடாேஸ் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்தியப்பிரிவின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு முதியோர்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு,சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.