75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் 75 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பல்லாண்டுகளாக வசித்து வரும் 75 பாகிஸ்தான் அகதிகளுக்கு செவ்வாய்க்கிழமை இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. சங்கா் லால்வாணி பங்கேற்று பேசுகையில், ‘‘பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் ஆண்டுதோறும் சுமாா் 1,000 ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனா். அந்த மாகாணத்தில் வசிப்போா் அச்சத்தால் இந்தியாவில் அடைக்கலம் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
அந்நாட்டில் இருந்து வந்து இந்தூரில் வசிக்கும் 600-க்கும் மேற்பட்டவா்களுக்கு இந்த ஆண்டு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை கோரி சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் அகதிகள் அளித்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீதான நடைமுறைகளை விரைந்து முடிக்குமாறு அரசு நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் அகதிகளில் ஒருவரான முரளீதா் (70) கூறுகையில், ‘‘பாகிஸ்தானில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தேன். தற்போது எனக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது’’ என்று தெரிவித்தாா்.
இந்திய குடியுரிமை பெற்ற மற்றொரு அகதியான அஞ்சலி (25) என்ற பெண் கூறுகையில், ‘‘இந்தியாவில் பெண்களுக்கு கண்ணியத்துடன் கிடைக்கும் கல்வி, சுதந்திரம், முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பாகிஸ்தானில் பெண்களுக்கு கிடைப்பதில்லை. இந்திய மக்கள் எங்களை மிகச் சிறப்பாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனா்’’ என்று தெரிவித்தாா்.