கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2019 சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ரிஷாட் பதியுதீன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மத்ரசா அதிபர் உள்ளிட்ட சந்தேகநபர்களை செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
1ஆம், 2ஆம் சந்தேகநபர்கள் மீது வழக்குகளை பதிவு செய்ய சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியதாக சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ரிஷாட் பதியுதீனுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அவருக்கு எதிராக பொய்யான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்ததோடு, அவர்கள் தொடர்பில் ஒரு சில கோரிக்கைகளை முன்வைக்க அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, அக்கோரிக்கைகளை முன்வைக்க எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கை எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் அந்தந்த சிறையில் இருந்தவாறு வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணித்த நீதிபதி அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை வழங்கினார்.