புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன.
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கி உள்லது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது புதுச்சேரி அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரியில் தங்கியிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி நேற்று மாலை முதல்-அமைச்சர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
அந்த சந்திப்பில் படப்பிடிப்பிற்கான அனுமதி கட்டணம் குறைப்பது குறித்து அவர் கோரிக்கை வைத்தார். முன்னதாக, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு ஒருநாள் கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ. 28,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.