‘தலைவி’ படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்து, வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், திரையரங்குகள் மூடியிருந்ததால் வெளியீடு குறித்து எதுவும் திட்டமிடாமல் இருந்தது.
இதற்கிடையே பல்வேறு ஓடிடி நிறுவனங்கள், பெரும் விலைக்கு நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு அணுகின. ஆனால், படக்குழுவினர் திரையரங்கில்தான் வெளியீடு என்பதில் உறுதியாக இருந்தார்கள். தற்போது தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. செப்டம்பர் 10-ம் தேதி ‘தலைவி’ திரைப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாகவே, இந்தப் படத்துக்குத் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பது நினைவுகூரத்தக்கது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘தலைவி’ ஒரே நேரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.