கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொவிட்- 19 தொற்று காரணமாக நிமோனியா ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே அவர் நேற்று காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 65 ஆகும். 2017 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அவர் நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையும், 2015 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையும் அவர் வெளிவிவகார அமைச்சராக பதவியில் இருந்தார்.
இவையிரண்டும் தவிர முன்னைய அரசாங்கங்களில் பல அமைச்சுப் பதவிகளை மங்கள சமரவீர வகித்திருந்தார். மக்கள் மத்தியில் நன்மதிப்புப் பெற்ற அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார்.
2007 ஆம் ஆண்டில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து புதிய கட்சியை மங்கள சமரவீர ஆரம்பித்தார். இக்கட்சி 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமரர் மங்கள சமரவீர சுமார் 30 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டிருந்தவராவார். இவர் 2020 இல் பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மங்கள சமரவீர 1994, 2000, 2001, 2004 ஆகிய தேர்தல்களில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.
மங்கள சமரவீர அரசியல் குடும்பமொன்றில் பிறந்தவர். இவர் முன்னாள் அமைச்சரான மகாநாம சமரவீரவின் மகனாவர். ஜூன் 2005 தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டவர். அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
மங்கள சமரவீர மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஏப்ரல் 21, 1956 அன்று அவர் பிறந்தார். அவருடைய குடும்பம் பிரபல்யம் வாய்ந்ததாக விளங்கியது. ‘அரசியல் கிங் மேக்கர்’ என அவர் புகழப்பட்டவராவார்.
1988-1989 காலம் அச்சம் நிறைந்த காலப் பகுதியாகும். தெற்கில் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. 1989 காலப் பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் வாய்ப்புப் பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இருந்தனர். அவர்களில் அனைவரையும் வசீகரித்த ஒரு இளம் அரசியல்வாதியாக மங்கள சமரவீர காணப்பட்டார்.
வெளிநாட்டில் கல்வி கற்று விட்டு வந்த மங்கள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமிருந்து அரசியல் அனுபவம் பெற்றார். மாத்தறை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார் அவர்.
சு.கவின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் மங்களவின் தெரிவை அன்று விரும்பவில்லை.கட்சித் தலைவியை சந்தித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால் மாத்தறையிலிருந்த புரட்சிகரமான ஒருவரான மகாநாம சமரவீரவின் புதல்வர் இவரென்பதால் மங்களவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் இருந்தது.
மகாநாம சமரவீரவுக்கு நான்கு பிள்ளைகள். மனைவி கேமா பத்மாஷனி.. பிள்ளைகளில் ஜயம்பதி கட்டட நிர்மாணக் கலைஞர். ஜயந்தி மற்றும் சாந்தினிக்கு அடுத்ததாக மங்கள பிறந்தார். கமியூனிசவாதியான மகாநாம சமரவீர 1952ம் ஆண்டு மாத்தறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 2வது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். சட்டத்தரணியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் அரசியலுக்கு வந்தவர் மகாநாம சமரவீர. 1956ம் ஆண்டு மஹஜன எக்சத் பெரமுன கட்சியில் போட்டியிட்டு மாத்தறை தொகுதியில் வெற்றி பெற்றார்.
மங்கள சமரவீர தனது 10வது வயதில் தந்தையை இழந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மங்கள சமரவீரவுக்கு தந்தையின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இங்கிலாந்தின் மிகவும் பழைமை வாய்ந்த கல்வி நிறுவனமான சென். மார்டின் ஸ்கூல் ஓப் ஆர்ட் பாடசாலையில் கல்வி கற்று கலைப்பட்டதாரியானார். மங்கள சமரவீர ஆடை வடிவமைப்பாளராக முன்னர் பணிபுரிந்தார்.
எளிமையான வாழ்க்கை முறையை அவர் கடைப்பிடித்து வாழ்ந்தார்.
தென்னிலங்கை கிளர்ச்சி காலகட்டத்தில் கணவரையும், பிள்ளைகளையும் இழந்த ஆயிரக்கணக்கான தாய்மாருக்காக மங்கள ‘மவ் பெரமுன’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். அந்த அமைப்பில் பலர் இணைந்தனர். கணவர்மார், பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனத் தேடும் வேளையில் அந்தத் தாய்மார்களுக்கு தொழில் பெற்றுக் கொடுக்க மங்கள முயற்சி செய்தார். அக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ சட்டத்தரணி என்பதால் ‘மவ் பெரமுனவுக்கு’ வந்த தாய்மாருக்கு சட்ட உதவியும் கிடைத்தது. 1956 ஏப்ரல் 21ம் திகதி பிறந்த மங்கள பின்சர சமரவீர எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகும் போது அவருக்கு வயது 32 ஆகும்.
ஊடகங்கள் மீதான அக்கறை காரணமாக மங்கள சமரவீர பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அரசியலில் பங்குபற்ற வேண்டும் என்ற எண்ணம் 1980 களின் இறுதியிலேயே அவருக்கு வந்தது. அப்போது அரசாங்கம் தென்பகுதி ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்களை அடக்கி வந்த நேரம் ஆகும்.
காணாமற் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர் மங்கள. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மங்கள தபால் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போது இலங்கை தொலைத்தொடர்புத்துறையை தனியார்மயப்படுத்துவதில் முன்னின்றார்.
கடந்த 12ஆம் திகதி மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் (2015 – 2017) அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சராகவும் (2017 – 2019) பதவி வகித்திருந்ததோடு, அதற்கு முன்னர் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரின் காலத்திலும் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்திருந்தார். மங்கள சமரவீர 1989ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.