கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் முக்கியமானவை என்பதால், பண்டிகைகளை மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்பு வழிமுறைகளுடன் கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் இருவரும் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அப்போது ராஜேஷ் பூஷன் கூறியதாவது:
”நாடு தற்போது கரோனா 2-வது அலையில் சிக்கி இன்னும் முடிவுக்கு வரவில்லை. 2-வது அலை இன்னும் முடியவில்லை. ஆதலால் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக பண்டிகை காலத்தில் கரோனா அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமானவை. இந்தக் காலகட்டத்தில் வரும் பண்டிகைகளைத் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். 41 மாவட்டங்களில் கரோனா பாசிட்டிவ் வாரத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.
கேரளாவில் கடந்த வாரம் 58.4 சதவீதம் பாதிப்பு இருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட 400 பேரில் பலருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், “தடுப்பூசி என்பது நோயின் வடிவத்தை, தன்மையை மாற்றக்கூடியது, நோயைத் தடுக்காது. ஆதலால், கரோனா பரவல் முடிந்துவிட்டதாகக் கூறி தடுப்பூசி செலுத்திக் கொண்டபின் முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.