ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையுமே தெரிந்தோ, தெரியாமலோ சக மனிதரின் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்கிற அடிப்படை சித்தாந்த்தை வைத்து இயக்குநர் சிம்புதேவன் பின்னியிருக்கும் புத்திசாலித்தனமான ஹைப்பர் லின்க் வகைத் திரைப்படம் தான் இந்த கசடதபற.
ஹைப்பர் லின்க் திரைப்படம் என்றாலும் இந்தப் படம் ஒவ்வொரு கதையாக ஆந்தாலஜி போலவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்கள் இன்னொரு கதைக்கு வருவதும், கதையில் ஏற்படும் சிக்கல்களுக்கு இன்னொரு கதையில் ஏற்படும் சம்பவங்களால் தீர்வு ஏற்படுவதும் என தனது எழுத்தில் மிகச் சிறப்பான ஒரு திரைக்கதையை எழுதி அரங்கேற்றியிருக்கிறார் சிம்புதேவன்.
வெங்கட்பிரபுவே தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கும் பகுதிதான் அதிக உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. ஆனால் இதில் அவரது நடிப்பு அபாரம். அதிலும் கடைசியில் உணர்ச்சி மிகுதியில் அப்படியே தரையில் படுத்து வானத்தைப் பார்ப்பதில் நமக்கும் ஆனந்தக் கண்ணீர் வரவைக்கிறார்.
கிட்டத்தட்ட அனைத்து கதைகளிலுமே இறுதியில் ஒரு திருப்பத்துடன் முடித்திருப்பது, அடுத்தது என்ன என்கிற சுவாரசியத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. கவசம் பகுதியில் யூகி சேது கதாபாத்திரம், சதியாடல் பகுதியில் சங்கிலித் தொடர் சம்பவங்கள் மூலம் சம்பத் கதாபாத்திரம் தன் நிலை உணர்வது, அறம்பற்ற பகுதியில் விஜயலட்சுமியின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு, அக்கற பகுதியில் ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தின் தவிப்பு என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விஷயம் நம்மை ஈர்க்கிறது.சாந்தனு, ரெஜினா, ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ப்ரியா பவானி சங்கர், சிஜா ரோஸ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் அந்தந்த பகுதிகளுக்கு வலு சேர்க்கிறது. ஒரு நல்ல செயலால் நன்மைகள் நடக்கும் என்று பல காலமாக சொல்லப்பட்டு வரும் விஷயத்தை இங்கு அப்படியே எதிர்மறையாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அதுவும் திரைக்கதை சுவாரசியத்தையே கூட்டுகிறது. ஆறுத் தனித்தனி கதைகளாகவும் சரி, அவை ஒட்டுமொத்தமாக ஓரே கதையாகத் தெரிவதிலும் சரி, கதைத் தேர்வில் இயக்குநர் காட்டிய அக்கறை தெரிகிறது.
கையில் எடுத்துக் கொண்ட விஷயத்தில் தனது அதிமேதாவித்தனத்தைக் காட்ட நினைக்காமல் அனைவருக்கும் எளிமையாகப் புரியும் விதத்திலேயே கையாண்டது இந்தப் படத்தின் அடுத்த சிறப்பம்சம். எதேச்சையாக இவ்வளவு விஷயங்களா நடக்கும் என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்காமல் அனைத்தும் இயல்பாக நடக்கும் சம்பவங்களே என்று நம்ப வைத்ததே பெரிய வெற்றி. அங்கங்கு தெளித்திருக்கும் நகைச்சுவை வசனங்களும், நகைச்சுவையாளர் சிம்புதேவன் இன்னும் தொலைந்து போகவில்லை என்பதைக் காட்டியிருக்கிறது.
ஆனால் நாடகத்தனமான காட்சியமைப்புகள் இந்தப் படத்தின் மையப் பிரச்சினையாக இருக்கிறது. நல்ல எழுத்தாளர்கள், தங்கள் எழுத்தக்கள் மூலமாகவே அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைப்பது போல, சிம்புதேவன் வசனங்கள் மூலமாகவே அத்தனையையும் சொல்லிப் புரிய வைக்கிறார். சில இடங்களில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை டப்பிங்கில் மாற்றியிருப்பதும், கூடுதலாக சேர்த்திருப்பதும் நெருடல்.
கதைக் களத்தில் சொல்லப்படும் நிலப்பரப்பு என்பது எந்த விதத்திலும் கதையில் நடக்கும் சம்பவங்களிலோ, கதை மாந்தர்களிடையேயோ ஒரு முக்கியப் பங்கை வகிப்பதாகத் தெரியாத போது தென் சென்னைக் கதைகள் என்று விளம்பரங்களில் சொன்னதன் காரணம் கடைசி வரை புரியவில்லை. சில கதைகள் நடக்கும் காலகட்டம் அப்படி மற்ற கதையின் அதே காலகட்டத்தில் சாத்தியம் என்கிற லாஜிக் கேள்விகளும் எழுகின்றன.தனது திரைக்கதையின் வலிமையோடு, க ச ட த ப ற என்கிற ஆறு வல்லின எழுதுக்களைக் கொண்டு சுவாரசியக் கலவையாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன். இந்தப் படத்தின் தொழில்நுட்ப விஷயங்களில், காட்சியமைப்புகளில் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தால் கண்டிப்பாக தமிழ்ல் ஓர் உலக சினிமாவாக இது இருந்திருக்கும். இப்போதைக்கும் ஒரு நல்ல தமிழ் படமாக இதைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்.
சோனி லைவ் தளத்தில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.