டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேல் நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார்.
கதாநாயகனாக வடிவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பளமாக ரூ.12 கோடி பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. திடீரென்று அந்த படத்தில் இருந்து வடிவேல் நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் செய்தார். இதனால் வடிவேல் புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேல் வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. வடிவேல் கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால் பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இனிமேல் வடிவேல் நடிக்க தடை எதுவும் இல்லை.
இந்தநிலையில், தந்தி டிவிக்கு நடிகர் வடிவேலு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள்.
நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். 2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன் என்றார்.