வடசென்னை’ படத்தின் முன்கதையை வைத்து பிரம்மாண்ட வெப் சீரிஸ் ஒன்றைத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதர படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன்.
தற்போது, ‘வடசென்னை’ படத்தின் கதாபாத்திரங்களின் முன்கதையை வைத்து வெப் சீரிஸ் ஒன்றைத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இதனை முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.
அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோரின் கதாபாத்திரங்களின் முன்கதையை இந்த வெப் சீரிஸில் படமாக்கவுள்ளார். இதில் அமீரின் சிறுவயதுக் கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயது முதல் 24 வயது வரைக்குமான கதை என்பதால் பல்வேறு லுக்குகளில் நடிக்கவுள்ளார் கென் கருணாஸ். இதற்கான கதையைத் தற்போது எழுதி வருகிறார் வெற்றிமாறன். ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் சீரிஸின் பணிகளை ‘விடுதலை’, ‘வாடிவாசல்’ ஆகிய படத்தின் பணிகளை முடித்துவிட்டுத் தொடங்கவுள்ளார் வெற்றிமாறன்.