தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அவருடைய இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தமிழரசுக் கட்சி தனித்தும் ஏனைய கட்சிகள் தனித்து இயங்கப் போவதாகவும் வெளியான செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது ஒரு பொறுப்பற்றரீதியான பிரசாரம். நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்திவிடும். எங்களுடைய இலக்கை அடைய முடியாது கொரோனா நேரத்தில் இவ்வாறான கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடாது
மனித உரிமைப் பேரவையில் 46/1 என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பச்லெற் அம்மையார் இலங்கை தொடர்பாக ஒரு முக்கியமான உரையாற்றுவாரென எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் ஒரு பேச்சுக்காக தாங்கள் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென கூறுவதை நாங்கள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர், நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு, கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது தொடர்பில் உரையாற்றுவார் என கருதுகிறோம்.
அதையொட்டி தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளும் ஒன்றுபட்டு மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர் நடைபெறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் விரோதமாக இடம் பெறுகின்ற விடயங்கள் தொடர்பாக எங்கள் மதிப்பீட்டை நாங்கள் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக இரண்டு விதமான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றது ஒன்று கட்சிகள் மத்தியில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை அனுப்பி வைப்பது, இரண்டாவது பொது அமைப்புகளிடம் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் தயாரிப்புகளை மையமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர் கையெழுத்திட்டு ஒரு அறிக்கையை அனுப்பி வைப்பது என்பதாகும். அநேகமாக அந்த அறிக்கை இன்று நண்பகலுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
அதைவிட கட்சிகளின் சார்பிலே சில அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு அனுப்பவேண்டும்.
தனித்தனியாக கொடுக்கப் போகின்றோம் என்ற செய்திகளை தவிர்த்து தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இதுவரை ஒன்றுபட்டு செயல்படுகின்ற தீர்மானங்கள் என்ற அக்கறையோடு செயற்படுகின்ற கட்சிகள் இன்று அல்லது நாளை மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி பதவி சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிற்கு இராணுவத்தை பயன்படுத்துவது நல்லதுதான். அதேவேளை எல்லாத்துறையிலும் குறிப்பாக நிர்வாகத்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும்.
பாராளுமன்ற கட்சி தலைவர்களையும் மருத்துவ நிபுணர்களையும் சேர்ந்து ஒரு தேசிய அமைப்பை உருவாக்கி திட்டங்களை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது.
கொரோனா தொற்றின் திரிபுகள் தீவிரமடைந்து வருவதால் மக்கள் அவதானத்துடன் சுகாதார நடைமுறை பின்பற்றியும் செயற்பட வேண்டும். கொரோனா வைரஸ்போல விலைவாசியும் எகிறியுள்ளது.
உழைப்பின்மை, வறுமை பசி பட்டினி காரணமாக மக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள நீண்டவரிசையில் நிற்பதுடன் அலைந்து திரிகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.