விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘லாபம்’ படத்தை மறைந்த டைரக்டர் ஜனநாதன் இயக்கியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு விஜய் சேதுபதி பேசினார். அவர் பேசியதாவது:-
டைரக்டர் ஜனநாதனிடம் பழகிய அனுபவங்களை இங்கு பல பேர் பகிர்ந்து கொண்டார்கள். அவருடைய உதவியாளர் ஆலயமணி பேச முடியாமல் போய் உட்கார்ந்து விட்டார். எனக்கும் அந்த உணர்வுதான். ஜனநாதன் இறந்த அன்று படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு நான் ‘டப்பிங்’ பேச வேண்டியிருந்தது. அந்த வேலை இல்லாவிட்டால், நான் அவருடன் இருந்திருப்பேன்.
அவர் இறந்தபோது யாரும் பக்கத்தில் இல்லை. இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஜனநாதனுக்கும், எனக்கும் இருந்த உறவு, ஒரு தந்தைக்கும், மகனுக்குமான உறவு போன்றது. காலம் இவ்வளவு கேவலமானது என்று தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும்போது அவருடைய அருமை தெரியவில்லை. தெரிந்திருந்தால், அவருடன் இன்னும் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு இருப்பேன்.
யாராவது உங்களிடம் அன்பு பாராட்டினால், அவருடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். அன்பு காட்டி, உறவை மேம்படுத்துங்கள். இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு முழுகாரணமும், ஜனநாதன்தான்.
நான் 4 படங்கள் தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது.
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையை கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விதத்தில் சிந்திக்க தூண்டுகிறது. அப்படி சிந்திக்க தூண்டும் வகையில், ஆறுமுககுமார் தயாரித்து இருக்கிறார்.’’
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.