டெல்லியில் இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல இடங்களிலும் மழைநீா் சூழ்ந்தது. குறிப்பாக சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை 94.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. சனிக்கிழமை காலை பெய்த கனமழையால், நகரின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த பருவமழை காலத்தில் மொத்தம் 1,100 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன், 2003 ஆம் ஆண்டில், டெல்லியில் பருவமழை காலத்தில் 1,050 மிமீ மழை பெய்தது. இதன் மூலம் டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையமே மழை நீர் சூழ்ந்து நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிலையம நிர்வாகம் கூறியதாவது:-
நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டன, தேசிய தலைநகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். திடீரென பலத்த மழை பெய்ததால், சிறிது நேரம், முகத்துவாரத்தில் தண்ணீர் தேங்கியது. அதை ஆராய எங்கள் குழு உடனடியாக சீரமைக்கப்பட்டது மற்றும் பிரச்சினை தீர்க்கப்பட்டது”,என்று தெரிவித்துள்ளது.