வரலாற்றுப் படங்களில் நடிக்கவே மாட்டேன்: வடிவேலு

திரைத்துறையில் எனக்குப் போட்டி நான்தான் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் வடிவேலு தெரிவித்தார்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படக்குழுவினருடன் வடிவேலு நேற்று (செப்டம்பர் 12) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மத்தியில் வடிவேலு பேசியதாவது:
”இந்தப் பிறந்த நாளில் புதிதாகப் பிறந்தது போல் உணர்கிறேன். அனைத்துப் பிரச்சினைகளையும் கடந்து ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி. திரையுலகில் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது. சாதித்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியுள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில் போய்க் கொண்டிருந்த தன்னைக் கலைத்தாய் அள்ளி எடுத்துக் கொண்டாள். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. மற்றவர்களைச் சிரிக்கவைக்கும் இந்த வேலை எனக்குப் பிடித்திருக்கிறது. குழந்தைகள் வரை என்னைத் தெரிந்துவைத்து, என்னைப் போன்றே பாவனைகள் செய்வது கடவுள் கொடுத்த வரம்.திரைத்துறையில் எனக்குப் போட்டி நான்தான். ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் முந்தைய கதாபாத்திரத்தை விடச் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். இனிமேல் வரலாற்றுப் படங்களில் நடிக்கவே மாட்டேன். இது கலைத்தாயின் மீது ஆணை.
அதேபோல் எந்த சமூக வலைதளத்திலும் நான் இல்லை. என் பெயரில் வெளியாகும் அனைத்துமே போலியானவை. சுராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அவரிடம் முதன்முதலில் பேசியபோது என்னுடைய தீவிர ரசிகர் என உற்சாகத்துடன் பேசினார். அவருடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி”.
இவ்வாறு வடிவேலு பேசினார்.

Related posts