சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா செய்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்குரிய நிலையில் தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய குறித்த அமைச்சை வழங்கியமை தொடர்பில் நன்றி தெரிவித்து, ஜனாதிபதிக்கு தனது இராஜினாமா கடிதத்தை எழுதியுள்ள அவர்,
ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் பல்வேறு விடயங்கள் காரணமாக அரசாங்கம் அசௌகரியத்தை எதிர்நோக்கக் கூடாது எனும் நோக்கில் தான் தனது சுய விருப்பத்துடன், இன்றையதினம் (15), தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வது தொடர்பான தங்களின் (ஜனாதிபதியின்) பரிந்துரையை மிகக் கௌவரத்துடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று, அங்கிருந்த 2 அரசியல் கைதிகளை முழந்தாலிடச் செய்து, தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்ததாக லொஹான் ரத்வத்தே மீது குற்றம்சாட்டப்படுள்ளது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
தனது இராஜினாமா பற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இன்றைய தினம் (15) அவர் அறிவித்த நிலையில், ஜனாதிபதி அவர்களும், அவருடைய இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த, கடந்த வருடம் டிசம்பர் மாதம் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.