‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டின்போது ரசிகர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதே வேளையில், சில ரசிகர்கள் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேனராக உருவாக்கி வைத்தார்கள். அதன் முன்பு ஆடு ஒன்றை வெட்டி, அதன் ரத்தத்தை பேனரின் மீது தெளித்துக் கொண்டாடினார்கள்.
இந்தச் சம்பவம் எந்த ஊரில் நடைபெற்றது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. இதனைப் பார்த்த அனைவருமே ரஜினி ரசிகர்களைக் கடுமையாகச் சாடினார்கள்.
தற்போது இந்தச் சம்பவத்தை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:” ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது.