தற்போது சின்னத்திரையில் சன் டிவி – விஜய் டிவி இரண்டுக்கும்தான் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டன. இதனால் சின்னத்திரை நிறுவனங்கள் பலவும் மக்கள் மத்தியில் தங்களுடைய இருப்பை நிலைநிறுத்தப் புதிதாக நிகழ்ச்சிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
இதில் சன் டிவி – விஜய் டிவி இரண்டுக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. அதற்குப் போட்டியாக சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஆனால், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அளவுக்கு மக்கள் மத்தியில் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி பிரபலமாகவில்லை.
தற்போது அடுத்த போட்டியாக, விரைவில் சன் டிவியில் புதுமையான இசை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. இதில் முதன்முறையாக சின்னத்திரையில் தோன்றவுள்ளார் இளையராஜா. ‘ராஜபார்வை’ என்ற பெயரில் உருவாகும் இந்த நிகழ்ச்சியை ப்ளாக் ஷீப் நிறுவனம் உருவாக்கவுள்ளது. இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியே விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்குப் போட்டிதான் என்கிறார்கள். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனை எட்டியுள்ளது. இதில் பங்கேற்ற பலரும் தமிழ்த் திரையுலகில் பாடகர்களாக வலம் வருகிறார்கள்.
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக இளையராஜாவை வைத்து பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி ‘ராஜபார்வை’ நிகழ்ச்சியை உருவாக்கி விடவேண்டும் என்பதுதான் சன் டிவியின் திட்டம் என்று கூறப்படுகிறது.