எனக்கும் விஜய்க்கும் சண்டைதான் என்று ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 71-வது திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’. இதில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தாணு, சேவியர் பிரிட்டோ, இயக்குநர் ராஜேஷ், இயக்குநர் பொன்.ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
“இங்கே வந்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி. இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் இங்கு வந்திருக்கிறார். அவர் ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே வந்திருப்பது அந்த நம்பிக்கையே இங்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.நான் காமன் கோட்டையில் எட்டாம் வகுப்பு படித்தபோது தேர்வு எழுதுவதற்கு திருப்பாச்சி செல்ல வேண்டும். அங்குள்ள எங்கள் உறவினர் வீட்டில் தங்கித் தேர்வு எழுதினேன். நாளை கணக்கு பாடத் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இன்று இரவு நான் எம்.ஜி.ஆர் படத்துக்குப் போய்விட்டு வந்து நன்றாகத் தூங்கினேன். மறுநாள் தேர்வு எழுதினேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைத்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். அந்தச் சான்றிதழ் உள்ளது. எப்படி என்னால் முடிந்தது? என் ஆசிரியர் அறிவுரை கூறுவார். “வருடம் பூராவும் ஒழுங்காகப் படித்தால் போதும் தேர்வுக்கு என்று படிக்க வேண்டாம்” என்பார். அப்படித்தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு அதற்கான கூலியைக் கடவுள் கொடுப்பார். இனி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். உழைப்பில் அவ்வளவு பெரிய முதலீடு செய்துள்ளார்.இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் ஒரு இயக்குநராக, நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். அவரிடம் இந்தக் கதையைச் சொல்லி நான் விவரித்தபோது, ”அதெல்லாம் விரிவாகப் பேச வேண்டாம். நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்” என்று சொன்னார். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
படப்பிடிப்பில் இன்னொரு டேக் என்று நான் சொல்வதற்கு முன்பாக அவர் தயாராக இருப்பார். நான் அவரிடம் கேட்பதற்கு யோசனையாக இருக்கும்போதே ,உடனே அடுத்த டேக் போகலாமா என்று மீண்டும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு நடித்துக் கொடுத்தார். உங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சர்வ சுதந்திரம் கொடுத்தார். ஓர் இயக்குநருக்கு அதைவிட வேறென்ன வேண்டும்’? நான் இத்தனை படங்கள் எடுத்து இருந்தாலும், எண்ணிக்கை முக்கியமல்ல. அவரது படங்கள் சிறப்பானவை. அவரை எப்படி வேலை வாங்குவது என்று ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால், அவர் இயக்குநரின் நடிகர் ஆகிவிட்டார்.