ஒரு கிராமத்தின் நடுத்தர குடும்பத்து பெண், திவ்ய பிரபா. அதே கிராமத்தின் பெரிய தாதாவான ‘பூ’ ராமு தயவுடன் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தலைவி ஆகிறார். கிராமத்தின் நலனுக்காக அரசு ஒதுக்கிய பணத்தில், ‘பூ’ ராமு பங்கு கேட்கிறார். கொடுக்க மறுக்கிறார், கர்ப்பிணியான திவ்ய பிரபா.
இந்த தகராறில், அவருடைய கணவரை ‘பூ’ ராமு வெட்டி கொலை செய்கிறார். திவ்ய பிரபாவை உயிரோடு எரிக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண், குழந்தையுடன் உயிர் தப்புகிறார். மகன் விஜய் ஆண்டனியை ஐ.ஏ.எஸ். கலெக்டராக்க வேண்டும் என்பது அவரது கனவு.
அம்மாவின் கனவை நனவாக்கும் முயற்சியில் விஜய் ஆண்டனி ஈடுபடும்போது, அவரை வம்புக்கு இழுக்கிறார்கள், அரசியல் ரவுடிகள். அவர்களை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? என்பது கதை.
கோடியில் ஒருவனாக விஜய் ஆண்டனி. ஒரு தாய் உயிருக்கு போராடி பெற்ற குழந்தையாக, வளர்ந்து வாலிபர் ஆன நிலையில், அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்ற போராடும் மகனாக, எதிரிகளை துவம்சம் செய்யும் வீரனாக, விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் அத்தனை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
படம் பார்ப்பவர்களை அந்த கதாபாத்திரத்துடன் ஒன்ற வைக்கிறார், விஜய் ஆண்டனி.
பளிச் தோற்றம் கொண்ட அழகான நாயகியாக அவ்வப்போது வந்து போகிறார், ஆத்மிகா. அம்மா வேடத்தில் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், திவ்ய பிரபா. வில்லன் வேடங்களில் நிறைய புதுமுகங்கள், பயத்தில் உறைய வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கூடுதல் அம்சங்கள். இதுபோன்ற கதைகள் ஏற்கனவே வந்திருந்தாலும் ஜீவனுள்ள காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு வில்லன் அடக்கப்பட்டதும், இன்னொரு வில்லன் முளைத்து எழுந்து பதற்றம் கூட்டுகிறார்.
இடைவேளை வரை சூப்பர் வேகத்தில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஆனந்த கிருஷ்ணன். அப்புறம் மிதமான வேகத்துடன் காட்சிகள் கடந்து போகின்றன. வீட்டுக்குள்ளேயே தன்னை முடக்கிக்கொண்ட அம்மா (திவ்ய பிரபா), உச்சக்கட்ட காட்சியில் வெளியே வருவது, சிறப்பு.