ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (19) மதியம் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்கும் வகையில் ஜனாதிபதி ஆலோசனை குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரைகளை கோரியுள்ள நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் கைதிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதோடு, இவர்களின் விடயம் தொடர்பாக அரசாங்கம் அரசியல் காய் நகர்த்தலையே செய்கின்றது.
ஜெனிவா மாநாடு நெருங்குகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதி அமைத்துள்ள ஆலோசனை குழு கேள்விக்குரியாகியுள்ளது.
குறித்த விடயத்தில் அரசாங்கம் அரசியல் கைதிகளின் கோரிக்கையான அவர்களை அநுராதபுர சிறைச்சாலைகளிலிருந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கையை உடனடியாக பரீசிலனை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத வழிபாடுகளுக்கும், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் தடை விதித்திருக்கும் அரசாங்கம் மதுபானசாலைகளை திறந்து வைத்திருப்பது கேலிக்கூத்தான ஒரு செயலாகும்.
இதன் மூலம் நாட்டில் மேலும் மக்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டு குடும்பங்களில் தேவையற்ற பிரச்சினை உருவாக்குவதற்கு அரசாங்கமே அங்கீகாரம் வழங்கியுள்ளதா ?
2,000 ரூபாய் கொடுப்பனவு மலையக மக்களுக்கு கிடைக்காத சூழ்நிலையில் மதுபானசாலைகளை திறந்து மேலும் அவர்களை பொருளாதார சிக்கலுக்குள் தள்ளிவிட்டு இருக்கின்றது இந்த அரசாங்கம்.
சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சீனாவின் குப்பைகளை இலங்கைக்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு அனுமதிக்க முடியாது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளையானது இலங்கை மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து வெளியாகியிருக்கும் சூழ்நிலையில் அதனை விவசாயிகள் எவ்வாறு பாவிப்பது.
எனவே இதற்கு எதிராக விவசாயிகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும். நானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் விவசாயம் தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற பொழுது அது தொடர்பாக விவசாய திணைக்களம், விவசாயிகள் அணைவருடனும் கலந்தாலோசித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்வரும் காலத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.