அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடங்கி பலரது கனவு திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ இருந்துள்ளது. இது சோழர்களின் காலத்தில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கல்கி எழுதிய புனைவுக் கதை ஆகும். இன்று வரை லட்சக்கணக்கான வாசகர்களின் மனம் கவர்ந்த நாவலாக இது விளங்குகிறது.
இந்த கதையை திரைப்படமாக எடுப்பதற்கு இயக்குனர் மணிரத்னம் நீண்ட காலமாக முயற்சித்து வந்தார். செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை இயக்கிய பிறகு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளை மணிரத்னம் தொடங்கினார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தாய்லாந்திலும், வட இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இதற்கான படப்பிடிப்பு நடந்து வந்தது.
மேலும் மணிரத்னம் இயக்கும் முதல் சரித்திர திரைப்படம் என்பதாலும், மிகப்பெரிய பொருட்செலவில், பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதாலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகி வந்த நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் கார்த்தி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் விரைவில் திரைக்கு வர உள்ளதாக பதிவிட்டுள்ளனர். எனவே பொன்னியின் செல்வன்-1 இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.