கொரோனா சடலத்தை வீடு கொண்டு சென்றதால் பரபரப்பு!

கிளிநொச்சியில் கொரோனாத் தொற்றினால் உயிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர் கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த கிராமத்தில் அவருடைய இறுதி நிகழ்வுகள் அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்கனவே தனிமைப்படுத்துள்ள குறித்த மரணம் நிகழ்ந்த வீட்டில், கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை மக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கின்றபோது அங்கு செல்கின்ற மக்கள் ஊடாக மீண்டும் கொரோனாப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இருந்தபோதிலும் நேற்று (19) காலை 7.00 மணியளவில் அவரின் சடலம் வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும் வாகனம் வவுனியா செல்வதற்கு பதிலாக உதயநகர் கிழக்கில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று வாகனம் அவர்களின் வீட்டின் உள்ளே சென்றிருக்கின்றது.

அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் திரண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம் மீளவும் வவுனியாவிற்குச் சென்றிருக்கின்றது.

இதனிடையே, கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரியூட்டும் இடத்தில் கூட மூன்று அல்லது நான்கு பேருக்கு மட்டுமே தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்கப்படுவது நடைமுறையாகும்.

அதேபோல சடலத்தை எரியூட்டுபவர்கள் கூட முழுமையாக கொரோனாப் பரவலைத் தடுக்கும் வகையிலான ஆடைகளை அணிந்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். ஆனால் மரணச் சடங்களில் பங்குகொண்ட மக்கள் மாஸ்க் தவிர வேறெந்த பாதுகாப்பினையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் மரணச் சடங்கினை நடத்துவதை தடுக்கும் நோக்கில் வைத்திய அதிகாரி பிரிவுக்கு தகவல் வழங்கிய கிராம மட்ட அரச அதிகாரிகள், மரணவீடு நடத்தியவருக்கு நெருங்கிய உறவினர்களில் ஒருவரான அரச உயர் அதிகாரி உட்பட்ட பலரால் தொலைபேசி ஊடாக எச்சரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின், மைத்துனர்கள் மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

உயிரிழந்தவரின் மருமகன் கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டப்பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த மரணச் சடங்கினை வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாட்டில் பிரபல மருத்துவர் ஒருவரும் முன்னின்று செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மரணச் சடங்கு குறித்த தகவலை வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு வழங்கியவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடிந்துகொண்டமை தொடர்பிலான ஆதாரங்களும் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொரோனாவின் தொடர் தாக்கத்தால் அதிலிருந்து மீள்வதற்கு மக்களும் நாடும் கடும் சிரமப்பட்டுவரும் நிலையில் உயர் பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்கின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன.

Related posts