விஜய்யை இயக்க வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருள் என்று இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஜய் நடிக்கவுள்ளார். இதனை இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 66-வது படமாகும். இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை நீண்டகாலமாகவே நடைபெற்று வந்தது.
நேற்று (செப்டம்பர் 26) யாருமே எதிர்பாராத வகையில் ‘தளபதி 66’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும், இந்த அறிவிப்பு வெளியானவுடன் தில் ராஜு மற்றும் இயக்குநர் வம்சி குடும்பத்தினர் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்கள்.
அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் இயக்குநர் வம்சி பேசியதாவது:
” ‘மகரிஷி’ படத்துக்கு தேசிய விருது அறிவித்தபின் இங்கு வந்து தரிசனம் செய்ய நினைத்தோம். ஆனால், அப்போது கரோனா தொற்று அதிகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் வரமுடியவில்லை. இப்போது விஜய் நடிக்கும் திரைப்படத்தை அறிவித்துள்ளோம். எனவே, இதுவே தரிசனம் செய்ய சரியான நேரம் என்று நானும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் நினைத்தோம். கடவுளின் ஆசியில்லாமல் எதுவும் நடக்காது என்று நம்புபவர்கள் நாங்கள்.இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும். அதை மட்டுமே இப்போதைக்குக் என்னால் கூறமுடியும். விஜய் ஒவ்வொரு படத்திலும் புதிதாகத் தெரிவார். எனக்கு அவருடன் இது புது அனுபவம். தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் அவர். அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருளே. இப்போதைக்கு அறிவிப்பு மட்டுமே செய்திருக்கிறோம். இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். மேற்கொண்டு மற்ற விவரங்களையும் நாங்கள் வெளியிடுவோம்”.
இவ்வாறு இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.