விசாரணைகளை நடத்தும் குழுவின் அறிக்கை கிடைத்ததும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி.தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு தமது நண்பர்களுடன் அவர் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் ஐவரடங்கிய விசாரணைக்குழுவை நீதியமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார். மேற்படி குழு தமது விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு தமதுநண்பர்களுடன் முறைகேடாக பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளன. அதனையடுத்து வெளிவந்த தகவல்களையடுத்து இராஜாங்க அமைச்சர் தமது சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவியை கடந்த 15ஆம் திகதி இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.