அரசியல்வாதிகளை ஊடகங்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்கலாமே என்று பவன் கல்யாண் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவ் கட்டா இயக்கத்தில் சாய்தரம் தேஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிபப்ளிக்’. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் திரைத்துறை பிரச்சினைகள், அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் காட்டமாகப் பேசினார் பவன் கல்யாண். தனது பேச்சில் சாய்தரஜ் தேஜ் விபத்து குறித்த செய்திகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து பவன் கல்யாண் பேசியதாவது:
“சாய்தரம் தேஜ் விபத்தில் படுகாயமடைந்து இன்னும் மருத்துவமனையில் நினைவு திரும்பாமல் இருக்கிறார். இதுவரை நான் அவரது திரைப்பட விழாக்களுக்கு வந்ததில்லை. இன்று அவர் வரமுடியாத நிலையில் அதற்கு ஈடு செய்யவே, தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாகவே நான் வந்திருக்கிறேன்.
அவரது விபத்து குறித்துப் பல தவறான செய்திகள் வந்திருக்கின்றன. ஆட்டோவை முந்திச் செல்ல முற்படும்போது தடுமாறி விழுந்ததில்தான் அவருக்கு அடிபட்டது. ஆனால், அவர் அதிக வேகத்தில் வந்தார், தடுமாற்றத்தில் இருந்தார் என்றெல்லாம் தவறாகச் செய்தி வெளியிடுகிறார்கள். ஒரு ஆட்டோவை முந்தும்போது நாம் அனைவருமே எப்படிச் செல்வோமோ அப்படித்தான் அவர் சென்றார். விபத்து ஏற்பட்டிருக்கிறது. அது அவருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம்.
இப்படியான விபத்துகள் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். திரைப்படக் கலைஞர்களும் மனிதர்கள்தான். எனவே கொஞ்சம் மனிதத்தன்மையோடு இருங்கள். அதே சமயம் திரைத்துறைதான் யாரும் எளிதில் கல்லெறிந்து தூற்றும் துறையாக இருக்கிறது. 40 கி.மீ. வேகத்தில் சாய்தரம் தேஜ் பைக் விபத்து என்று செய்தி போடுகிறார்கள். ஏன் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி மரணம் குறித்து இப்படிப் பேசவில்லை?
சர்வதேச விமான நிலையத்தில் என் மீது நடந்த கொலை முயற்சி வழக்கு இப்போது என்ன ஆனது? அப்போது ஆளுநர் வரை அதுகுறித்துப் பேசினார்கள். சாய்தரம் தேஜ் விபத்தைப் பற்றிப் பேசுவதை விடுத்து இதுபற்றிப் பேசுங்கள். விவசாயப் பிரச்சினையைப் பற்றிப் பேசுங்கள். ராயலசீமாவில் இருக்கும் பிரச்சினையைப் பற்றிப் பேசுங்கள். பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசுங்கள். எழுதுவதற்கும், ஒளிபரப்பவும் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. நடிகர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணமே இது. ஏன் ஊடகங்கள் அரசியல்வாதிகளைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்கலாமே?அப்படிக் கேட்டால் வீட்டுக்குள் புகுந்து அடிப்பார்கள் இல்லையா. அதனால்தான் பேசுவதில்லை. சாய்தரம் தேஜ் போன்ற அப்பாவி நடிகரைப் பற்றிப் பேசுவார்கள். அரசியல் குற்றங்கள் பற்றிப் பேசுங்கள், நடிகர்களைப் பற்றி அல்ல.
திரைத்துறையின் நலன் பற்றிப் பலர் பேசுகின்றனர். அதிகம் வரி கட்டுவது திரைத்துறைதான். ரூ.10 கோடி சம்பளம் வாங்கும் ஒருவருக்கு அதில் ரூ.4 கோடி வரியாகவே போய்விடும். இது யாரிடமிருந்தும் பிடுங்கிச் சம்பாதித்த பணம் அல்ல. அவர்கள் உழைத்துச் சம்பாதித்தது”.
இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.