பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் கடந்த செப். 30ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும், வேளாண் மந்திரியாக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெற்றது. அனைத்து சுற்று வாக்குகள் எண்ணக்கையின் போது மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இதேபோல் ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ்ச் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். இதன்படி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர். .இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வெற்றி செய்தி அறிவிக்கப்பட்டவுடன் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிபூர் தொகுதியில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து, மத்திய அரசு எங்களை (அதிகாரத்திலிருந்து) அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது. நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்பட்டது. எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மம்தா பானர்ஜி 2 முறை பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தநிலையில், மூன்றாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..