ருத்ரதாண்டவம்’ படம் பார்த்துவிட்டு அந்த படத்தின் டைரக்டர் மோகனுக்கு தங்கர்பச்சான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘இந்த படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியது கடமை என உணர்கிறேன். மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற – காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாக, கருத்துகளாக முன்வைத்து இருக்கிறீர்கள்.
மக்களின் பலவீனத்தை பணமாக்குவதற்காக பொழுதுபோக்கு எனும் போதைப்பொருளை திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தை பின்நோக்கி சீரழிப்பவர்களுக்கு இடையில், விழிப்புணர்வை தூண்டும் உங்களின் ‘ருத்ரதாண்டவத்தை’ மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்.
இந்த வணிக சூழ்நிலையில், கிடைத்த வசதி வாய்ப்புகளை கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாக பல கோடி மக்களின் இதயங்களுக்கு கடத்தியிருக்கும் உங்களுக்கும், திரைப்படக்குழுவினருக்கும் மக்களில் ஒருவனாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’’ இவ்வாறு தங்கர்பச்சான் பாராட்டியிருக்கிறார்.