நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை செயற்குழுவுக்கும் இடையிலான 5 வது சந்திப்பில் இடம்பெற்ற விடயங்கள் பின்வருமாறு,
1. நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை செயற்குழு 2021 செப்டம்பர் 29 ஆந் திகதி கொழும்பில் ஒன்று கூடியது.
2. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையேயான வழக்கமான இருதரப்புப் பரிமாற்றங்களின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒரு நாள் சந்திப்பின் போது, இருதரப்பு மற்றும் திறந்த சூழ்நிலையில், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தமது உறுதிப்பாட்டை இரு கூட்டாளர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான பொதுவான நலன்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒத்துழைப்பைத் தொடருவதற்கு ஒப்புக்கொண்டனர்.
3. கொவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டன. சமமான தடுப்பூசி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நன்மைகளை அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் கோவெக்ஸ் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த பங்களிப்பை இலங்கை பாராட்டியது.
4. நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. 20 வது திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரங்களைப் பிரித்தல் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். சுயாதீன நிறுவனங்களின் திறமையான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
5. அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சட்ட உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ஆலோசனை செயன்முறைகள் ஆகியவற்றின் மூலம், நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான சட்ட சீர்திருத்தத் திட்டம் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை வழங்கியது. இந்த முயற்சியில் பரந்த ஆலோசனை செயன்முறை ஒன்றை பரிசீலினை செய்வதற்குஇலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது.
6. சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. இந்த முயற்சிகளில் இலங்கையை தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது.
7. சிறுபான்மையினர் தொடர்பான விடயங்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தீர்க்கும் நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கலந்துரையாடியது. அனைத்து சமூகங்களினதும் உரிமைகளுக்கும் அரசியலமைப்பால் சமமாக உத்தரவாதமளிக்கப்படும் நாட்டின் பன்முக அமைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது.
8. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பை இலங்கை வழங்கியதுடன், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப காலவரையறையொன்றுக்குள் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த சந்திப்பின் மூலம் இது தொடர்பான முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் போது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மனித உரிமைகளின் தரங்களை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக் காட்டப்பட்டது.
9. அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனைக்கான தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. தொடர்ச்சியான தடையை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனையை முறையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையை ஊக்குவித்தது.10. உடன்படிக்கை அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு உட்பட மனித உரிமைகள் பேரவையுடனான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். ஐக்கிய நாடுகள் கட்டமைப்பில் 2030 ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வது உட்பட, பலதரப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றுவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
11. இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. மனிஷா குணசேகர மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் இயோனிஸ் கியோகரகிஸ் – ஆர்கிரோபோலஸ் ஆகியோர் இந்த செயற்குழுவிற்கு இணைத்தலைமை தாங்கினர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)