ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ‘அயல் உறவுக்கு முதலிடம்’ கொள்கையின் பிரதான இலக்காக, இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைவதாகவும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.
இலங்கையுடனான எமது பங்குடமையில் சக்தி துறைகள் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் சக்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கவும் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் தொடர்ந்தும் ஈடுபாட்டினை கொண்டிருக்கின்றோம். எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து இலங்கை ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் சாதகமான பேச்சுக்கள் இரு தரப்பு அரசாங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையுடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது.இலங்கையின் முன்னேற்றங்கள், ஏனைய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் இருந்து சுயாதீனமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்க தொடர்புகள் மேலும் வலுவடையும் எனவும் இந்திய வெளியுறவு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.