‘பண்டோரா பேப்பர்ஸ்’ வெளியிட்டுள்ள ஆவணங்கள் 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்டவை என்றும் அது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் உரித்தானதல்ல என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகில் மிகுந்த செல்வந்தர்கள் மற்றும் பலம் வாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள், மறைவான சொத்துக்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியே பென்டோரா பேப்பர்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு சுமார் 12 மில்லியன் ஆவணங்களை அது வெளிப்படுத்தியுள்ளது. அதன்மூலம் உலகில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைச்சர்கள் நீதிபதிகள், மேயர்கள், படைத்தளபதிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் ரகசிய நிதி சேமிப்பு குறித்தும் பென்டோரா பேப்பர்ஸ் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
பென்டோரா பேப்பர்ஸ் 1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட நிதி முதலீடு தொடர்பில்லேயே தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் 1990 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ யுகம் ஆரம்பித்திருக்கவில்லை என்றும் அதனால் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உரிய காலம் அதுவல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொது ஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் அது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.