ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.
இந்த எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை வானத்தில் பரவியது. இதன் பின்னர் அந்த எரிமலையில் இருந்து கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 2-வது முறையாக லா பால்மா எரிமலை வெடித்துள்ளது.
எரிமலை வெடிப்பிற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை 800-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 6 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு, அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து வருகிறது. அங்கு ஆபத்தான வாயுக்கள் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எரிமலையில் இருந்து வரும் எரிமலைக் குழப்பு, சுமார் 370 ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. அதில் பெரும்பாலானவை கேனரி தீவின் முக்கிய விளைச்சலில் ஒன்றான வாழை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நிலங்கள் ஆகும். எரிமலை வெடிப்பால் எழும்புகின்ற புகை மூட்டம் வானில் நீண்ட தூரம் வரை பரவியுள்ளது. மேலும் எரிமலை சாம்பல் காரணமாக லா பால்மா விமான நிலையம் கடந்த வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எரிமலைக்கு அருகில் அவ்வபோது மின்னல்கள் தோன்றுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு மின்னல் ஏற்படுவது இயல்பானது என 2016 ஆம் ஆண்டு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, எரிமலை வெடிப்புகளின் போது எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல் துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஏற்படும் நிலைமின்சாரம் காரணமாக மின்னல் தோன்றுகிறது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.