நடந்து முடிந்த தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அணி தோல்வியைத் தழுவியது.
பிரகாஷ்ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே பிரகாஷ்ராஜின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் நேற்று (13.10.21) பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து மா அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களாகவும், சங்கப் பொறுப்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணிதான் மா அமைப்பின் நிர்வாகிகளாகச் செயல்படுவார்கள் என்பதால் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு தாங்கள் இடையூறாக இருக்க விரும்பவில்லை என்பதால் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதை அவர்கள் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜீவிதா ராஜசேகர் முன்னிலையில் அறிவித்துள்ளனர்.