ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் ஷங்கர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து ஷங்கர் கூறும்போது, “அந்நியன் கதை என்னுடையது. எனவே இந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் தேவை இல்லை” என்றார். ஆனாலும் மோதல் நீடித்து வருகிறது. திரைப்பட வர்த்தக சபையில் அந்நியன் இந்தி ரீமேக்கை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் புகார் அளித்து இருக்கிறார். இதனால் படவேலைகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்நியன் இந்தி ரீமேக்கை கைவிட முடிவு செய்து இருப்பதாகவும், அந்த படத்துக்கு பதிலாக வேறு கதையில் ரன்வீர் சிங்கை நடிக்க வைத்து இயக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாகவும், அவர் சொன்ன புதிய கதை ரன்வீர் சிங்குக்கும் பிடித்துபோனதாகவும் இந்தி இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.