அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள். டெய்லர்ஸ் ரோடு வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது வீட்டின் முன் அவரது ஆதர்வாலர்கள் திரண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர்.
மேலும் நிர்வாகிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.