உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கி கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் வாழ்க்கையில் மிகவும் வேதனைக்குரிய சம்பவம் அதுவென தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமான பிரச்சினை விரிவாக பேசப்பட வேண்டியது என்றும் எனினும் அது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள நிலையில் அது சம்பந்தமாக எதையும் கூற முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இக் குண்டுத் தாக்குதல்களில் மரணமடைந்த மற்றும் காயமடைந்துள்ள அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தமக்கு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள அவர், தமது அரசாங்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும் தேவாலயங்களை முழுமையாக புனரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்கள் தொடர்பில் தாம் அன்பும் கௌரவமும் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.