அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதையாக விவசாயிகளின் நிலை மாறியுள்ளதென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ராகலையில் நேற்று (25) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட அரிசி விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிகரிக்க போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட கேஸ் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட சீனி விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது 5/- ரூபா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. இது ரெயிலர் மாத்திரமே. மெயின் பிக்சர் வர இருக்கிறது. அதில் பெட்ரோல், டீசல் விலை 20/- முதல் 30/-ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளது.
கேஸ் விலை அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் அடுப்புற்கு சென்றனர். தற்போது மண்ணென்ணை அடுப்புமில்லை மண்ணெண்ய்புமில்லை.
மேலும் சிமெந்து தட்டுப்பாடு, ஒரே வாரத்தில் அரிசி, கேஸ், பால்மா, பால், முட்டை, பாண், பேக்கரி பொருட்கள், உணவு பார்சல், தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட பல உணவும் பொருட்களின் விலைகளை அதிகரித்து சாதனை படைத்த அரசாங்கம் அடுத்த வாரம் எதையெல்லாம் அதிகரிக்கப் போகிறதோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.
1,000 ரூபா சம்பள விடயத்திலும் இந்த அரசாங்கம் பெயில் என்பது தௌிவாகத் தெரிகிறது. மக்களை வெறுமனே வர்த்தமானி அறிவித்தல் விடுத்து இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. இதற்கு துணைபோனவர்கள் இன்று அமைதியாக உள்ளனர்.
அதனால் அரசாங்கம் முழுமையாக தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாவை பூரணமாக கிடைக்க மற்றும் வேலை நாட்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் விலைக்கு இந்த ஆயிரம் ரூபாவும் போதாது என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.
அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதையாக விவசாயிகளின் நிலை இன்று மாறியுள்ளது.
காதில் கழுத்தில் கிடந்த நகைகளை அடகு வைத்து நிலத்தில் பயிர் விதைத்தவர் களுக்கு அரசாங்கம் கோவணத்தை கலட்டி நிர்வாணமாக்கி உள்ளது.
சேதன பசளை என்பது நல்ல திட்டம். அதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை ஓரே இரவில் நிறைவேற்ற நினைப்பது. முட்டாள்தனம். படிப்படியாகவே அதனை செய்ய வேண்டும்.
ஆனால் இந்த அரசாங்கம் தங்களது சுயலாபத்திற்காக இரசாயன உர இறக்குமதியை தடை செய்து ஒட்டுமொத்த விவசாயிகளையும் பள்ளத்தில் தள்ளியுள்ளது.
இதனால் மலையகத்தில் சிறிய மற்றும் பெரிய அளவு விவசாயம் செய்யும் இளைஞர்கள் பெரிதும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது போதாத குறைக்கு கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் விவசாய பயிர்கள் அழிவடைந்துள்ளன.
எனவே, மலையக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரம் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்பட வேண்டும். இன்று ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினை பெரும் போராட்டமாக மாறியுள்ளது.
ஆசிரியர்கள் கோருவது சம்பள அதிகரிப்பல்ல. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிலுவை கொடுப்பனவாகும். நமது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினையில் அனைத்து பெற்றோரும் இனைந்து போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்தை பெற்றோர் கையிலெடுத்து நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.