பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களை சந்தித்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் இதில் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கலாநிதி சுரேன் ராகவன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினூடாக மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவில் ஊடகவியலாளரிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலம் மற்றும் கொக்கிளாய் பாலம் ஆகியன விரைவில் புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அத்தோடு ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை விரைவில் இயக்கி அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் இவற்றினூடாக முல்லைத்தீவில் விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.