பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா விடுதலை ஆனார். அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் அவர் வந்தார். அதன்பிறகு சசிகலா எங்கு வெளியில் சென்றாலும் அவரது காரில் அ.தி.மு.க. கொடி தவறாமல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக தெரிவித்த சசிகலா தேர்தலுக்கு பின்னர் தனது நடவடிக்கைகள் மூலம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து பொன்விழா கொண்டாட்டங்களில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக பொன்விழா மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சசிகலாவும் பொன்விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம் சசிகலா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய அவர், அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்று கூறினார்.
இதன்பிறகு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்ற சசிகலா அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் கல்வெட்யும் திறந்து வைத்தார். இது கட்சிக்குள் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சசிகலா மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறி வரும் சசிகலா மீது 3 சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. உறுப்பினராக கூட இல்லாத சசிகலாவின் செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சசிகலா பொதுச்செயலாளர் என்று கூறுவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 419, 153ஏ, 505(பி) ஆகிய 3 சட்டப்பிரிவுகளில் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தனக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் புகார் அளித்துள்ளது தொடர்பாக சசிகலா எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து இதற்கு நேர்மாறாக உள்ளது. இது கட்சியில் விவாத பொருளாக மாறி வருகிறது. தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி இதில் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க சசிகலா இன்று புறப்பட்டுள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு ஒரு வாரம் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அ.தி.மு.க கொடி கட்டிய காரில் இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பினார். தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பிய சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அவருடன் இளவரசியும் உடன் செல்கிறார்.மக்கள் ஆதரவைத் திரட்ட சசிகலா, 25 இடங்களில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா நாளை தஞ்சாவூரில் நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார்.28 ஆம் தேதி மதுரை செல்லும் சசிகலா அங்கு முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி, அதன் பின் ஆதரவாளர்களை சந்திக்கிறார்,
பின்னர் கோரிப்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க திட்டம். 29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30 ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்ற பின் அதரவாளர்களுடன் சந்தித்து பேசும் சசிகலா அன்றைய தினமே தஞ்சாவூர் திரும்புகிறார்.1 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா ஆதரவாளர்களை சந்திக்கிறார்.
இதன் பின்னர் திருநெல்வேலி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் அரசியல் ரீதியான சுற்றுப்பயணத்தையும், தொண்டர்களை சந்திப்பையும் சசிகலா திட்டமிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.