நீர்வளம், நில வளம் மற்றும் மனித வளம் என அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் தன்னகத்தே கொண்டுள்ள போதும், அரசியல் பொருளாதார இருப்புகளுக்கும் அனைத்து தேவைகளுக்கும் ஏனையோரை நம்பி அடிமையாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிளைக் குழுக் கூட்டங்கள் வவுணதீவு பிரதேசங்களில் இடம்பெற்றபோது கலந்து கொண்டு திங்கட்கிழமை(25) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமையும் இல்லை அரசனுமில்லை. ஆனால் நில வளம், நீர் வளம், மனித வளம் என அனைத்து வளங்களும் காணப்படுகின்ற போதும் வவுணதீவு பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு மாகாணம் எல்லா வளங்களும் கொண்டு திகழ்கின்றது. கடல்வளம், குளங்கள், ஆறு, நில வளம் என அனைத்து வளங்களும் காணப்படுகிறது. ஆனால் இந்த வளங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தாமல் யாரோ ஒருவர் வந்து இந்த வளங்களை பயன்படுத்துகின்ற துர்ப்பாக்கி நிலைமை ஏற்படுகின்றது.
அது மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியாக மாற்று மாவட்டங்களிலும் ஏனைய அரசியல் தலைமைகளிடம் அரசியலுக்காக நம்பி வாழ்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு வெளியில் உள்ளவர்கள் யாரும் காரணம் அல்ல. தீர்க்கமான அரசியல் தலைமைகளை தெரிவு செய்ய முடியாமல் இருக்கின்ற எமது மக்களே பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுகின்ற அரசியல் தலைமைகள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும். ஆனால் தமிழர்களிடமிருந்து 60 வருடங்களாக வாக்குகளைப் பெற்ற அரசியல் தலைமைகள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எந்த வித ஆக்கபூர்வ செயற்பாடுகளை முன்னெடுக்காத போதும், தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக மாற்றும் அரசியல் தலைமைகளிடம் கையேந்தி நின்ற சூழலையும் வாழ்வாதாரத்திற்காக தங்களது வளங்களை பயன்படுத்த முடியாத சூழலையும் உருவாக்கி இருந்தார்கள். அதுவே இன்று வறுமையில் வவுணதீவு பிரதேசம் முதன்மை இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றார்.