எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ அனர்;த்தம் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்துக்கும் எதிராக இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, மேற்படி கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக மீனவ சமூகத்தினருக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாட்டின் சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சரூக்குவ கடற்கரை பகுதியில் கழிவுகள் நிறைந்து காணப்படும் நிலைமையை பார்வையிடுவதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று அங்கு சென்றிருந்தார்.
அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அப்பகுதி சில தரப்பினரால் துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராயருடன் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரும் அங்கு சென்றுள்ளதடன் அங்கு நிலைமையை பார்வையிட்ட பின் மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்துள்ள பேராயர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தம் காரணமாக நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மேற்படி கப்பல் தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்கு நட்ட ஈடு கோரி நான் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளேன்.பாதிக்கப்பட்ட பிரதேசங்களை துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
எமது நாடு சுயாதீனமான நாடு. எமது நாட்டின் சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் அது தொடர்பில் பேசுவதற்கும் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும். வேறு நாட்டு கடற்பரப்பில் இவ்வாறு தீ அனர்த்தம் இடம் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் பில்லியன் கணக்கான நிதியை செலுத்த வேண்டியிருந்திருக்கும். இனியும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக மக்களும் மீனவ சமூகத்தினரும் குரலெழுப்ப வேண்டும். அந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.