இலங்கை ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்படபல சிரேஸ்ட அதிகாரிகளை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என கோரும்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டசமர்ப்பணத்தை குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் என்ற சர்வதேச அமைப்பு சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
பிரிட்டனில் வாழும் 200 இலங்கை தமிழர்களின் சார்பில் இந்த மனுவை குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றத்தின் நியாயாதிக்க வரம்பிற்குள் உள்ள குற்றங்கள் பற்றிய தகவலின் அடிப்படையில் வழக்குரைஞர் விசாரணையை தொடங்குவதற்கு அனுமதிக்கும் ரோம் சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜயசூரிய ஆகியோர் உட்பட பல தனிநபர்களின் பெயர்கள் இந்த சட்ட சமர்ப்பணத்தில் காணப்படுகின்றன.
இவர்கள் கடத்தல் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதை போன்ற நடவடிக்கைகளின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்பாளிகளாகயிருந்தார்கள் என சர்வதேச அமைப்பு தனது சட்டசமர்ப்பணத்தில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின்கடுமை காரணமாக அவர்களிற்கு இலங்கையிலிருந்து தப்பி பிரிட்டனில் தஞ்சமடைவதை தவிரவேறு வழியிருக்கவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள சட்ட சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் தலைமையிலான பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல் மிரட்டல் துன்புறுத்தல் கொள்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கான உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்பத்தில் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பிரிட்டனிலும் அவர்கள் துன்புறுத்தல் கண்காணிப்பு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு சட்ட சமர்ப்பணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.