மும்பை – கோவா சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு, சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது.
இந்தநிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் நேற்று முன்தினம் மும்பை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. ஆனால் தீர்ப்பின் விவரம் வெளியிடப்படாததால், அவர் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
14 நிபந்தனைகள்
நேற்று பிற்பகல் நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பின் விவரத்தை அறிவித்தார். அதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் 14 நிபந்தனைகளை ஐகோர்ட்டு விதித்து உள்ளது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம் பிணை செலுத்த வேண்டும். அதே தொகையுடன் ஒருவர் அல்லது 2 பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ள கூடாது. 3 பேரும் தங்களது பாஸ்போர்ட்டை போதைப்பொருள் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். சிறப்பு கோர்ட்டின் அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு செல்ல கூடாது.
இதேபோல மும்பையை விட்டு வெளியே சென்றால் அதுகுறித்து முன்கூட்டியே போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுடன் 3 பேரும் தொடர்பில் இருக்க கூடாது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 3 பேரும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு அதை தாமதப்படுத்த முயற்சி செய்ய கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல 3 பேரும் ஐகோர்ட்டின் நிபந்தனைகளை மீறினால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உடனடியாக அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு கோர்ட்டில் முறையிட வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
விடுதலையில் தாமதம்
ஐகோர்ட்டின் தீர்ப்பு நகலை வழக்கு விசாரணை நடந்து வரும் சிறப்பு கோர்ட்டில் ஆர்யன் கான் வக்கீல்கள் உடனடியாக தாக்கல் செய்தனர். அப்போது அங்கு வந்த நடிகை ஜூகி சாவ்லா, ஆர்யன் கானுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து சிறையில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கான ஆணையை சிறப்பு கோர்ட்டு பிறப்பித்தது. மாலை 5.30 மணிக்குள் சிறைக்கு சென்று ஆணையை சமர்பிக்க வேண்டும். அதன்படி சமர்பிக்க முடியாததால், ஆர்யன் கானால் நேற்று சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந்த நடைமுறைகள் இன்று (சனிக்கிழமை) தான் முடிவடையும் என்பதால், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரும் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே தீர்ப்பின் முழுமையான விவரத்தையும், ஜாமீன் வழங்கியதற்கான காரணத்தையும் அடுத்த வாரம் அறிவிப்பதாக மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.