சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு எம்மால் தனித்து வாழ முடியாது, அதே நேரம் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சிறுபான்மை இனங்களை அரவணைத்துச் செல்லல் போன்ற விடயங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிலஸ் சலுகையையும் பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
கண்டி சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசின் சில செயற்பாடுகள் ஓரளவு திருப்தி அளிப்பதாக இருப்பதால் எதிர்காலத்தில் சாதகமான நிலைகள் ஏற்படலாம். ஜனாதிபதி அடிக்கடி சர்வதேசத்திற்கு நல்ல செய்திகளைத் தெரிவித்து வருகிறார். இது ஒரு திருப்பு முனையாக அமையாலம். சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு அல்லது மனித உரிமைகளை மதிக்காது சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியாது. தற்போதைய சூழ்நிலையில் இயற்கைப் பசளைப் பிரச்சினை, ஆசிரியர் சம்பளப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மனித உரிமைகள் மீறப்படுதல் போன்ற விடயங்களில் சர்வதேசம் இலங்கையை அவதானித்து வருகிறது. ஏனெனில் ஜி.எஸ்.பிளஸ் சலுகை என்பது எமக்கு வழங்கப்படவுள்ள ஒரு அன்பளிப்பு. அது கிடைக்குமாயின் எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஜரோப்பிய நாடுகள் அவர்களது நாட்டில் தீர்வை விதிக்காது. அப்படியாயின் சர்வதேச சந்தையில் எமது பொருட்களுக்கான விலை குறைவாகக் காணப்படுவதால் எமது ஏற்றுமதி அதிகரிக்கும். எமது பொருட்களுக்கு அந்த நாடுகளில் விதிக்கப்படும் தீர்வை வரி காரணமாக விலை அதிகரித்து ஏற்றுமதி குறையலாம்.
தற்போது பிரதானமாக தைத்த ஆடைகள், தேயிலை போன்றன ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது பாதித்தால் எமது பொருளாதாரம் மேலும் பாதிக்கும். அதே நேரம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமை மற்றும் சிறுபான்மை இனங்களது உரிமைகளை மறுப்பது போன்ற விடயங்கள் இடம் பெறும் நாடுகளுக்கு ஜரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பிளஸ் வரி சலுகை வழங்குவதில்லை.
மேலும் மனித உரிமை மற்றும் சிறுபான்மையினர் விடயங்களில் நாம் பின்பற்றும் சிறிய அணுகுமுறைகளே பாரிய விளைவுகளை சர்வதேசத்தில் ஏற்படுத்துகின்றது.
உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பதில் அளிக்காமை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து நீண்டகாலம் விசாரணையோ குற்றச்சாட்டுக்களோ இன்றி தடுத்து வைத்திருப்பது, இப்படியான விடயங்களை சீராக்குவதன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பை பெறலாம்.
மாகாண சபை முறை கொண்டு வரப்பட்டதே சிறுபான்மையினருக்கும் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வழங்குவதற்கே. அதுவும் கடந்த மூன்று வருடங்களாக மறுக்கப்பட்டு வருகின்றது. இதுவும் பாரிய உரிமை மீறலாக சர்வதேசம் கருதுகிறது. எமது அமைப்பு ஜனாதிபதி மற்றும் அரசுடன் இது பற்றி கலந்துரையாடியுள்ளது என்றார்.