சமீபகாலமாக கோவில் சிலைகள், புராதன சின்னங்கள் ஆகியவை வெளிநாட்டவரின் சதியால் களவாடப்படுகின்றன. அந்த புராதன சிலைகளையும், அவைகளை பற்றிய ரகசியங்களையும் திடுக்கிடும் திருப்பங்களுடன் ‘மாயோன்’ படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
படத்துக்காக புதுக்கோட்டை அருகில் உள்ள மாய மலையில் பாதாள அறை, புராதன சிலைகள் மற்றும் சின்னங்கள் போன்றவை ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இதுபற்றி படத்தின் டைரக்டர் என்.கிசோர் கூறியதாவது:-
‘‘பத்மநாபபுரம் கோட்டை, மகாபலிபுரம் சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, கீழடி கோட்டை ஆகிய இடங்களில் மர்மங்களும், அதிசயங்களும் அதிக அளவில் உள்ளன. புதையல் தேடி வருபவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை படமாக்கியது போல் குள்ள மனிதர்கள், காந்தர்வர்கள், ராட்சத பாம்புகள் ஆகியவைகளும் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. சிபிராஜ்-தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் ‘மாயோன்’ படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஸ் பேரடி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இளையராஜா மிகுந்த சிரத்தை எடுத்து அதிக நாட்கள் பின்னணி இசையமைத்து இருக்கிறார். அருண்மொழி மாணிக்கம் தயாரித்து இருக்கிறார்.