பாகுபலி படத்தைத் தொடர்ந்து டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரவுத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1920-களில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
டிவிவி தனய்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தை அக்டோபர் 13-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் தாமதமானதால் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில், படத்தின் பிரம்மாண்டமான காட்சிகள் அடங்கியுள்ள கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.