கொரோனா காலகட்டமாக இருந்தாலும் கூட, கடந்த ஆண்டு முதலே இடைவிடாமல் ஓ.டி.டி. மற்றும் தியேட்டர்கள் வாயிலாக ஆண்டுக்கு இரண்டு படங்கள் என்று நடித்து தள்ளியிருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
2020-ம் ஆண்டில் ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’ ஆகிய படங்கள், ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின. அதே போல் கடந்த மார்ச் மாதம் ‘ரங் தே’ என்ற திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அடுத்ததாக தீபாவளி விருந்தாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இது தவிர ‘குட் லக் சகி’, ‘சாணி காயிதம்’, ‘மரக்கார்: அரபிகடலின்டே சிம்ஹம்’, சார்க்காரி வாரி பாட்டா’ என தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ‘குட் லக் சகி’ என்ற திரைப்படம், இந்த மாதம் 26-ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஒருவரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்திய இந்தப் படத்தின் கதையில், கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவரோடு ‘ஈரம்’ ஆதி, ஜெகபதி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். விளையாட்டு, காதல், நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தை நாகேஷ் கூகூனூர் இயக்கியிருக்கிறார். இவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் சில படங்களை இயக்கியவர். அதில் அதிக படங்கள், வெளிநாடுகளில் திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும், விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளன. இதனால் இவரது இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘குட் லக் சகி’ படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.