சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அடுத்து புதிய படத்தில் நடிக்க ரஜினி தயாராகிறார். இது அவருக்கு 169-வது படம். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமான தேசிங்கு பெரியசாமி டைரக்டு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ரஜினி நடிக்கும் புதிய படத்தை அவரது மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை இயக்குவதற்கு சிவா பெயரை ரஜினியிடம் அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய் அல்லது சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க சிவா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தை விரைவாக முடித்து விட்டு ரஜினி படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா ஏற்கனவே அஜித்குமார் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், கார்த்தி நடித்த சிறுத்தை ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சில தெலுங்கு படங்களையும் டைரக்டு செய்துள்ளார்.