கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் வடியால் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மழை பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காவது நாளாக இன்று தியாகராய நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
“சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியதும் கொடுத்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
மேயர், துணை முதல்வர் பதவியில் இருந்தபோதே மழை பாதிப்பு ஆய்வு செய்தேன், தற்போது முதல்வராக மழை பாதிப்பை ஆய்வு செய்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை, ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த 6 மாதங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 50 முதல் 60 சதவித பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது, மழை காலம் முடிந்தவுடன் சீரமைப்பு பணி முழுமையாக நிறைவு செய்யப்படும்.
மழை காலம் என்பதால் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தேவையான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.