இலங்கை கடற்பரப்பில் தீ அனர்த்தத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவ சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நட்டஈடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு உள்ளிட்ட ஐந்து மனுக்கள் தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் போவதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மனித உரிமை செயற்பாட்டாளரான சரத் இத்தமல்கொட அடிகளார், மீனவ சமூகத்தைச் சேர்ந்த இருவரான காமினி பெர்னாண்டோ, வர்ணகுலசூரிய கிறிஸ்டோபர் பெர்னாண்டோ மற்றும் சுற்றாடல் தொடர்பான நிபுணரான கலாநிதி அஜந்தா பெரேரா மற்றும் சிவில் சமூக சேவை செயற்பாட்டாளரான ஜே.ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்படி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இம் மனு டி.பி. தெஹிதெனிய பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன உள்ளிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் தரப்பில் சிலர் நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் ஆஜராகி இல்லாத காரணத்தால் மனு மீதான விசாரணையை பிரிதொரு தினத்திற்கு ஒத்திப் போடுவதற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது. அதன் போது மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணகுலசூரிய இதுவரை மேற்படி மனு மீதான விசாரணை 3தடவைகள் ஒத்தி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை மேற்படி கப்பல் தீ அனர்த்தம் காரணமாக நாளுக்கு நாள் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.