புதிதாகத் திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண நாளுக்குப் பிறகு தங்களை நெருக்கமாக்கிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் கவனத்தை ஈர்க்க விரும்புவது இயற்கையானது. இதற்காக திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குறுகிய பயணம் நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருக்கிறது.
இது பெரும்பாலும் பணக்காரத் தம்பதிகளுக்கே உரியது. தொடக்க காலத்தில் திருமணத்திற்குப் பிந்தைய ´சுற்றுப்பயணத்தை´ மேற்கொள்வது நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க பணக்கார தம்பதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும் முடிந்தது.
இந்தத் தேனிலவு அல்லது ஹனிமூன் தொடர்பாக தொடர்பான வரலாறு பிரிட்டனில் இருந்து தொடங்குகின்றன. பிரிட்டன் மன்னர் எட்டாம் ஹென்றி தனது திருமணத்தைத் தொடர்ந்து அவரது மனைவியுடன் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள கோட்டையில் ஒரு வாரத்திற்கும் மேலாக கழித்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் சார்லஸ் தனது புதிய மனைவியுடன் ஹாம்டன் கோர்ட் அரண்மனையில் தனியாக இருந்தார். அதற்கு வேறு காரணங்களும் இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செய்தித்தாள் ஒன்று, ராணுவ அதிகாரியும் ஒரு அரச வாரிசும் “நார்விச்சிற்குத் தங்கள் திருமணத்தை நிறைவு செய்யப் புறப்பட்டனர்” என்று எழுதியது.
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் மலிவு விலையில் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. அதனால் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள்கூட புதுமணத் தம்பதிகளாக கடலோர நகரங்களுக்குச் ஒரு சிறப்புப் பயணத்தை மேற்கொண்டு வந்தார்கள்.
அதே நேரத்தில் அதிக வசதியான தம்பதிகள் வேறொரு கண்டத்துக்கே தப்பிச் சென்று புது வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது. கோடையில் திருமணம் செய்து கொண்டால், குறைந்தபட்சம் அவர்களால் வெளியிடங்களுக்குச் செல்லலாம். ஆனால் குளிர்காலத்தில் திருமணம் செய்யும் மணப்பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கின்றன. தேன் நிலவு என்ற பெயர் எப்படி வந்தது?
1800 களின் இறுதி வரை, ´ஹனிமூன்´ என்ற சொல் உண்மையில் திருமணத்திற்குப் பிந்தைய உல்லாசப் பயணத்தைக் குறிக்கவில்லை. திருமணத்தின் முதல் மாதத்தை மட்டுமே குறிப்பதற்கு அது பயன்பட்டது.
1552 ஆம் ஆண்டின் ஒரு புத்தகத்தில் ´ஹனி மோன்´ என்ற சொல்லானது புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்களைக் குறிக்கும் “கொச்சையான மக்கள்” என்பவர்களின் பயணத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சாமுவேல் ஜான்சனின் அகராதி “திருமணத்திற்குப் பிறகு மென்மை மற்றும் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லாத முதல் மாதம்” என்று இந்தக் காலகட்டத்தை வரையறுத்தது. இதன் உட்பொருள் என்னெவன்றால், சந்திரனுடனேயே அவர்களது நெருக்கமும் குறைந்துவிடும் என்பதுதான்.
இது 30 நாட்களுக்கு ஹனி-மீட் எனப்படும் தேன் மூலம் தயாரிக்கப்படும் மதுவைக் குடிக்கும் பழங்கால நடைமுறையுடன் தொடர்புடையது என்ற கூற்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருமணத்துக்குப் பிந்தைய பயணத்திற்கு இந்தச் சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1881-இல் திருமணத்துக்குப் பிந்தைய சமூகத்தைத் தவிர்த்துச் செல்லும் பயண நடைமுறையானது அவசியமானது இல்லை என்றும் “குறுகிய காலத் தேனிலவு” நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் ஒரு இதழ் குறிப்பிட்டிருக்கிறது.
சில பெண்கள் மூன்றே நாள்கள் பயணத்துடன் திருப்தியடைகிறார்கள் என்றும் அந்த இதழ் கூறியது. “முழுவதுமாக ஒரு மாதம் பயணம் மேற்கொள்வது பழைய பழக்கம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்த வேகமான காலத்தில் வாழ்க்கையின் வேகமும் மிக முக்கியமானது” என்று அந்த இதழ் கூறியது.
அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரம்பரிய விழாக்களின் கொண்டாட்டத்தின் நீளம் குறைக்கப்பட்டதால், விடுமுறை மிகவும் ஆடம்பரமாகவும் நீளமாகவும் மாறியது. 1900களின் முற்பகுதியில் பலூன்கள், கேரவன்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மலைப் பயணம், தென் துருவப் பயணம் என சாகசமான தேனிலவு பயணங்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர். அதுவே உலகமெங்கும் பரவியது.
தேனிலவு செல்வதில் மற்ற நிகழ்வுகளைப் போலவே நாகரிக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சில வந்து போயிருக்கின்றன. நவீன காலத் திருமணங்களில் செலவைச் சுருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால், தேனிலவும் ஹனிமூனுக்குப் பதிலாக “மினி மூன்” என்பது போல் விலைகுறைந்து, குறைந்த நாள்களுடன் முடியக்கூடிய வகையில் மாற்றப்பட்டுவிட்டது.